சனவரி 25 – மொழிப் போராளிகள் நினைவேந்தல்

# பாஸ்பரசிற்கு
சரியான தமிழ்ச்சொல்-
சின்னசாமி.
தானாய் எரிந்ததால்...

# தலைவாழை இலையில்
உடலையே படையலாக்கி
தமிழிற்கு வேண்டி-
அறுசுவை உணவு படைத்தவர்களே!
நீங்கள்
பொதிகை தென்றலிற்காகவா
தீ வளர்த்தீர்கள்?
சூரியக்குளிர் போக்கவா
தீ அரங்கேற்றினீர்கள்?

# எண் சாண் உடம்பிற்கும்
தமிழே சிரசம் என்றவர்களே!
உங்களுக்கு மட்டும்
மெளன அஞ்சலி கிடையாது.
பேச - வேண்டும் தமிழ்
பேச வேண்டும்
என்றவர்கள் அல்லவா நீங்கள்.

# அந்நாளில்
காவல்துறையின் வருகைப்பதிவேடு
உங்கள் மார்புகள்.
எத்தனை அழகான கையெழுத்துகள்
குண்டு....குண்டாய்.

# தமிழிற்கு-
நெருப்பு அகழி இட்டவர்களே!
நீங்கள் காலக்கண்ணாடியை
நெருப்பில் ஏற்றி வைத்தாலும்
அதில்
தெரிவதெல்லாம் இடவல மாற்றங்களா?
இல்லை ஏமாற்றங்களா!

1 மறுமொழிகள்:

அகராதி said...

மொழிப்போர் தியாகிகள் குறித்த பதிவுடன் வலையுலகிற்கு வரும் "நேர்த்தி"யை வரவேற்கிறேன்.

உடனிருக்கும் மற்ற இரு கவிதை(!)களையும் படிக்க சற்றே தலை சுற்றுகிறது.

எனினும் முயற்சிக்கு வாழ்த்து(க்)கள்!